பொன்னியின் செல்வன் திரைப்படமாகாமல் போனது ஏன்?

avatar

தமிழில் மிகுதியாகப் படிக்கப்பட்டதும் விற்கப்பட்டதுமான பெருங்கதை பொன்னியின் செல்வன்தான். நவீன இலக்கிய வேடம் நன்கு செல்லுபடியான எழுபது எண்பதுகளில் பொன்னியின் செல்வனை வம்புக்கு இழுத்துப் பேசாவிட்டால் ஒருவரை இலக்கியவாதியாகவே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். "அண்மையில் என்ன படித்தாய் ?" என்று கேட்டால் பொன்னியின் செல்வன் என்று ஒரு தரப்பு சொல்லிக்கொண்டே இருந்தது. நவீன இலக்கியக் கோணல் போக்குகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாத புத்தகப் படிப்பாளிகளின் விடை அது. புத்தகச் சந்தையில் அன்றைக்கும் இன்றைக்கும் மிகுதியாக விற்றுத் தீர்வது பொன்னியின் செல்வன்தான். பிற்பாடு அந்நூல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுதான் வாய்ப்பென்று எல்லாப் பதிப்பகங்களும் போட்டி போட்டுக்கொண்டு பொன்னியின் செல்வனைப் பதிப்பித்தார்கள். தேவையை மீறிய அளிப்பினால்தான் அந்நூல் தேங்கிப் போயிற்றே அன்றி, அதனைத் தேடி விரும்பிப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.


பழங்கதைகளின் அடியிழையாக இலங்கும் கதைத்தொன்மம் பொன்னியின் செல்வனில் காணப்பட்டதுதான் அதன் காலங்கடந்த வெற்றிக்குக் காரணம். வரலாற்றின் அடிப்படையில் யார் நெடுங்கதை புனைந்தாலும் அது அடர்த்தியான சுவைக்கூறுகளோடு இருக்கும் என்பது மாறா உண்மை. அதனால்தான் தொடக்கக் காலத் திரைப்படங்களில் வரலாற்றுக் கதைக்கூறுகள் மிகுதியாய் இருந்தன. வரலாற்றுப் படங்களைத் தவிர்த்து சமூகக் கதைகளுக்கு இடம்பெயர நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டவர் எம்ஜிஆர். என்னதான் சிவாஜியின் நடிப்பு தன்னிகரற்று இருப்பினும் சமூகக் கதைப்படங்களுக்கு எள்ளளவும் மாற்றுக் குறையாதவை அவர் நடித்த வரலாற்றுக் கதைப்படங்கள். வீரபாண்டிய கட்டபொம்மன், இராஜராஜசோழன் போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள். தொல்கதைப் படங்களையும் இதே பிரிவின் கீழ்ச் சேர்த்துக்கொள்ளலாம்.

அன்றைய தமிழ்த் திரைப்படச் சந்தையில் வரலாற்றுக் கதைகளுக்கு நிலவிய தேவைப்பாடு அளவில்லாதது. அச்சூழ்நிலையில் பொன்னியின் செல்வனைப் போன்ற புகழ்பெற்ற நெடுங்கதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்தானே ? அதுவும் நடந்தது. இதுவரை தமிழ்த் திரைப்படக் கதாசிரியர்கள் எல்லாரும் படித்துப் பார்த்த பெருங்கதையாக பொன்னியின் செல்வன்தான் இருக்கக் கூடும். படித்துப் பார்த்து ஒவ்வொருவரும் ஒரு திரைக்கதையும் அமைத்துப் பார்த்திருப்பார். எல்லாம் கூடிய நேரத்தில் எந்தத் தயாரிப்பாளரும் முன்வந்திருக்க மாட்டார். அதனால் அப்படியே கைவிடப்பட்டிருக்கக் கூடும்.

பொன்னியின் செல்வனுக்கு அடுத்ததாக ஒரு தொடர்கதை திரைப்படக்காரர்களின் கண்ணைத் தொடர்ந்து உறுத்தியது. அது சுஜாதாவின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' என்னும் புனைமருட்சித் தொடர்கதை. கரையெல்லாம் செண்பகப்பூவை எடுக்கும் கனவுகளோடு அன்றைய கோடம்பாக்கத்தில் உலவியவர்கள் எண்ணற்றோர். "எவ்வளவோ பேர் வந்து கேட்கறாங்க... அப்புறம் ஆளையே காணோம்," என்று சுஜாதா வருந்திக் கூறும்படி ஆனது. கரையெல்லாம் செண்பகப்பூ ஒருவழியாகத் திரைப்படமானது. சுஜாதா தம் எழுத்தில் தீட்டியிருந்த நாட்டுப்புற வாழ்க்கை, அரண்மனை இரகசியம், புதையல் தேடல் ஆகியவற்றின் சுவைக் கூறுகள் திரைப்படத்தில் ஓரளவுதான் வெளிப்பட்டன. என்னென்னவோ குறைகள் இருப்பினும் அன்று வெளியான திரைப்படங்களுக்கு எள்ளளவும் குறைவில்லாத உள்ளடக்கங்களைக் கொண்டிருந்த படம் கரையெல்லாம் செண்பகப்பூ. சுஜாதாவின் தொடர்கதைகள் பலவும் திரைப்படங்களாயின. அவை எவையும் தமக்கு நிறைவளிக்கவில்லை என்றுதான் சுஜாதா கூறினார்.

பொன்னியின் செல்வனுக்கு என்னதான் ஆயிற்று என்று பார்ப்போம். பொன்னியின் செல்வனையும் திரைப்படமாக்கும் முயற்சியில் பலர் கல்கி இதழின் ஆசிரியரைத் தொடர்ந்து அணுகி வந்தனர். அது திரைப்படமாவதற்கு நேர்ந்த முதல் தடை என்னவென்றால், படமெடுக்கும் தெம்பில்லாதவர்களிடம் அதன் உரிமை தரப்பட்டிருக்க, உண்மையிலேயே படமெடுக்கக் கூடியவர்கள் அணுகும்போது அதன் உரிமையைத் தர முடியாத சூழ்நிலை இருந்ததுதான். நெரிசல் மிக்க பேருந்தில் துண்டு போட்டு இடம்பிடிப்பதைப்போல புகழ்பெற்ற கதைகளை இவ்வாறு வளைத்துப்போட்டுக்கொண்டு மேல்தொகை வைத்து விற்பவர்களும் இருக்கின்றார்கள். அதனால்தான் எந்தக் கதையைத் திரைப்படமாக்கும் உரிமையைக் கொடுத்தாலும் காலவரம்பு குறிப்பிட்டு, இரண்டாண்டுகளோ ஐந்தாண்டுகளோ, ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும் என்பார்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரம்புக்குள் ஒரு கதை திரைப்படமாக எடுக்கப்படவில்லை என்றால் ஒப்பந்தம் இறந்துவிடும். அக்கதையின் உரிமம் அதன் ஆசிரியர்க்கே திரும்பச் சென்றுவிடும். ஆனால், அப்படியெல்லாம் இறுக்கிப் பிடிக்குமளவுக்கு இங்கே எந்நிலையும் இல்லை.


பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கும் முயற்சியில் எம்ஜிஆரும் இறங்கினார். எம்ஜிஆர் பிக்சர்சின் செயலாளரான ஆர் எம் வீரப்பனுக்குத் தெரியாமல் அங்கே எந்தக் கதையும் எடுக்கப்பட மாட்டாது. பேசப்படவும் மாட்டாது. அதன் பொருள் வீரப்பனுக்கே முடிவெடுக்கும் உரிமைகள் அனைத்தும் இருந்தன என்பதன்று. எம்ஜிஆருக்கு ஒரு கதை எப்படிப் பொருந்தும், அது திரைப்படமாக எடுக்கப்பட்டால் என்னென்ன செலவு பிடிக்கும், அதன் வணிகம் எவ்வளவு சிறக்கும் என்பனவெல்லாம் வீரப்பனுக்கே அத்துபடி. அதனால் அவர் கூறுவது எப்போதும் பிறழாதபடி துல்லியமாகவே இருக்கும். பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக எடுக்க முயன்றால் அதை வீரப்பன் ஏற்றுக்கொள்ளவே மாட்டார் என்பது எம்ஜிஆர்க்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அம்முயற்சி மிகுந்த பொருட்செலவுக்கு இழுத்துவிடும். இன்னொரு நாடோடி மன்னனைப்போல் மாறிவிடுவதற்கே வாய்ப்பிருந்தது. ஆனால், எம்ஜிஆருக்குப் பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற தீராத ஆவலை அடக்க முடியவில்லை. வீரப்பனுக்குத் தெரியாமல் பொன்னியின் செல்வன் கதை உரிமையை வாங்கியதோடு மட்டுமில்லாமல், எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பாக திரைப்பட விளம்பரத்தையும் கொடுத்துவிட்டார். இவை யாவும் நடந்து முடிந்த பிறகே வீரப்பனுக்குத் தெரிந்தது. இது என்ன புறக்கணிப்பாக இருக்கிறதே என்று கருதிய வீரப்பன் அதற்குப் பிறகு எம்ஜிஆர் பிக்சர்ஸ் வினையகத்திற்குச் செல்வதை நிறுத்திக்கொண்டார்.

எம்ஜிஆருக்கும் வீரப்பனுக்கும் பனிப்போர் என்பதைப்போல் இந்நிகழ்வை அன்றைய மூன்றாம் தர இதழ்கள் கிசுகிசுத்துவிட்டன. எம்ஜிஆரையே எதிர்க்கத் துணிந்துவிட்டாரா வீரப்பன் என்னும் அளவுக்குச் செய்திகள் முளைத்தன. இத்தகைய செய்திகள் வருவது வீரப்பனுக்கும் தெரியாது. தம்மை வந்து காணும்படி வீரப்பனுக்கு அண்ணாதுரையிடமிருந்து அழைப்பு வந்தது. வீரப்பன் உடனே அண்ணாவைக் காணச் சென்றார். அவர் கையில் அந்தச் செய்திகள் வெளியான இதழ்கள். "இதைப் பார்த்தாயா? எம்ஜிஆரை விட்டு விலகி வந்துவிட்டாயா?" என்று கேட்டார். அப்போதுதான் தாம் விலகி வந்தது மிகப்பெரிய பேசுபொருளாகியிருப்பது வீரப்பனுக்கு விளங்கியது. நடந்ததை விளக்கிக் கூறினார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அண்ணாதுரை, "இதோ பார்... இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே... இனி எது நடந்தாலும் அவ்விடத்தை விட்டு நீ வெளியே வரக்கூடாது... நீ வழக்கம்போல் அங்கே சென்று உன் வேலையைப் பார்," என்று கடிந்து அனுப்பினார்.

அண்ணாவின் சொற்களைச் சிரமேற்கொண்ட வீரப்பன் மறுநாள் வழக்கம்போல் எம்ஜிஆர் பிக்சர்ஸ் அலுவலகத்துக்குச் சென்று தம் இருக்கையில் அமர்ந்து வேலைகளைப் பார்த்தார். எம்ஜிஆர் வீரப்பனைப் புன்னகையோடு பார்த்துக்கொண்டார். ஏன் போனார் என்றும் கேட்கவில்லை, ஏன் வந்தார் என்றும் கேட்கவில்லை. "அந்தத் தன்மைதான் எம்ஜிஆர்," என்கிறார் வீரப்பன். வழக்கம்போல் வீரப்பனிடம் பேசத் தொடங்கினார். நிலைமை இயல்பாயிற்று. எம்ஜிஆரும் வீரப்பனும் சேர்ந்துவிட்டார்கள். ஆனால், பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் எடுக்கப்படவேயில்லை. எம்ஜிஆர் தொட்டுக் கைவிட்டது என்பதாலோ என்னவோ தெரியவில்லை, பொன்னியின் செல்வன் இன்னும் வெள்ளித்திரையைத் தொடவில்லை.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES