உதவியாளர் அடைந்த உயரம் - ஆர் எம் வீரப்பன்

avatar

எத்துறையில் ஒருவர் முதன்மையராகப் புகழ்பெற்றாலும் அவர் அவ்விடத்திற்குச் சென்று சேர யாரேனும் ஒருவர் பாடுபட்டிருப்பார். தோள்கொடுத்திருப்பார். அன்னார் அடைந்த புகழ் வெளிச்சம்தான் நமக்குத் தெரியுமேயொழிய அதற்காக அவரோடு உழைத்தவர்கள் பலராகத்தான் இருப்பார்கள். ஒருவர் புகழ்முடிக்கு வந்து சேர்வதற்கு முன்னும் பின்னும் அவருடைய எல்லாச் செயல்பாடுகளையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பில் திறமை வாய்ந்த ஒருவர் கட்டாயம் இருந்திருப்பார்.

திரையுலகிலும் அரசியல் களத்திலும் பேரெடுத்த ஒவ்வோர் ஆளுமையின் பின்னும் ஒருவர் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். கண்ணதாசன் என்றால் அவருடைய உதவியாளர் இராம கண்ணப்பனை மறந்துவிடமுடியாது. பாலசந்தர் என்றால் அனந்துவைத் தவிர்க்க முடியாது. எம்ஜிஆர் என்றால் ஆர் எம் வீரப்பனை மறக்கவே முடியாது. எம்ஜிஆருக்கும் வீரப்பனுக்கும் இடையில் அப்படியொரு பாசப்பிணைப்பு நிலவியது. தம்மிடம் வேலை செய்பவர் என்பதற்காக வீரப்பனை எம்ஜிஆர் ஒருமையில் அழைத்ததேயில்லை. "வீரப்பா கிட்ட சொல்லிட்டீங்களா... வீரப்பாவைக் கேட்டுக்குங்க..." என்பதே திரைத்துறை தொடர்பாக அணுகும்போது எம்ஜிஆர் இறுதியாகக் கூறி நிற்பவை.

நான் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படிப்பதில் பேரார்வம் உடையவன். தன்வரலாற்று நூலென்றால் இன்னும் சிறப்பு. புனைவு ஆசிரியர்கள் செய்யும் தகிடுதத்தங்கள் எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் நெடுங்கதைகளில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால், தன்வரலாற்று நூல்கள் ஒருவரின் பெருவாழ்க்கையை ஈரத்தோடும் சேற்றோடும் கூறுபவை. அதில் கூறப்படாதவை இருக்கக்கூடும் என்றாலும் கூறியிருப்பவை எல்லாம் அவர்க்கு நிகழ்ந்தவை.

"ஆர் எம் வீ ஒரு தொண்டர்" என்ற தலைப்பில் ஆர் எம் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியாகியிருக்கிறது. வீரப்பனின் அகவை நிறைவு விழாவன்று பத்திரிகையாளர் இராணி மைந்தனால் எழுதப்பட்ட அந்நூல் தமிழ்நாட்டின் ஐம்பதாண்டுக் கால அரசியல் திரைப்பட உலகத்தைக் குறுக்குவெட்டாகச் சொல்கிறது. எம்ஜிஆர் என்னும் ஆளுமை உருவான பெருங்கதையை அந்நூலிலிருந்தே நான் பெற்றுக்கொண்டேன். அந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளின் வரிகளுக்கு இடையேயுள்ள இடைவெளிகளில் நாம் இட்டு நிரப்பிக்கொள்ள எண்ணற்ற துப்புகள் இருக்கின்றன. இப்போது அந்நூல் எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை. எனக்கே அப்புத்தகம் பழைய புத்தகக் குவியலிலிருந்துதான் கிடைத்தது. அந்நூல் எங்கேனும் கிடைத்தால் தவறவிடாதீர்கள்.


நாட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவரான வீரப்பன் இளமையிலேயே தத்துக்கொடுக்கப்பட்டவர். கறுத்தவராயும் குள்ள உருவத்தினராயும் இருக்கும் வீரப்பன்மீது எடுத்த எடுப்பில் யாருடைய கவனமும் பதிவதற்கு வாய்ப்பில்லை. அவர்க்கென்று கலைத் திறமைகள் ஏதுமில்லை. ஆனால், வீரப்பன் நன்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர். கணக்கு போடுவதில் வல்லவர். மனிதர்களைக் கணிப்பதில் கெட்டிக்காரர். ஓரிடத்தில் ஆடாமல் அசையாமல் மணிக்கணக்கில் அமர்ந்து பணியாற்றுபவர். வீரப்பனை நம்பி பணப்பெட்டியை ஒப்படைத்துச் செல்லலாம். அவ்வளவு நம்பிக்கையானவர்.

ஈரோட்டில் உடனிருந்து தங்கி உதவி செய்வதற்கு நம்பிக்கையான ஓர் இளைஞர் வேண்டுமென்று பெரியார் தம் நண்பர்கள் பலரிடமும் கூறியிருந்தார். அப்போது அண்ணாதுரையிடம் உதவியாளராக இருந்தவர் வீரப்பன். பெரியாரின் வேண்டுகோள் அண்ணாதுரைக்கும் தெரிவிக்கப்பட்டது. உதவியாளர்கள் கிடைப்பார்கள். அவர்கள் நம்பிக்கையாகவும் நேர்மையாளராகவும் இருக்கவேண்டும் என்கிறாரே, எங்கே போவது? அக்காலத்திலும் நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் பற்றாக்குறைதான்.
பெரியார் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப உடனடியாக ஓர் உதவியாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது போன்ற பொறுப்பான வேலைகளுக்கு முன்பின் அறிந்திராத புதியவர்களையும் பரிந்துரைக்க முடியாது. ஆனால், பெரியார்க்கு உடனடியாக ஆள் தேவைப்படுகிறதே. "ஒரு நல்ல உதவியாளர் கிடைக்கும்வரை என்னிடம் பணியாற்றுகின்ற வீரப்பாவை அனுப்பிவைக்கிறேன்... தங்களுக்கேற்ற ஆள் கிடைத்தவுடன் இவரைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்," என்ற கோரிக்கையோடு பெரியாரிடம் அண்ணாதுரையால் உதவியாளராக அனுப்பி வைக்கப்பட்ட இளைஞர்தான் ஆர் எம் வீரப்பன். ஆர் எம் வீரப்பன் என்றால் எம்ஜிஆரின் நிர்வாகி என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர் அண்ணாதுரைக்கும் உதவியாளர். பெரியார்க்கும் உதவியாளர். அவர்களிடம் பணியாற்றிய உரத்தோடுதான் எம்ஜிஆரிடம் வந்து சேர்ந்தார். அவர்களிருவரிடமும் வீரப்பனுக்கு இருந்த நற்பெயரைப் பார்த்தே எம்ஜிஆர் வேண்டி விரும்பி அழைத்துக்கொண்டார்.

பெரியார் தாம் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்றால் தம்மோடு ஒரு புத்தக மூட்டையையும் எடுத்துச் செல்லும் வழக்கமுடையவர். அதற்கென்று ஓர் உதவியாளர் இருப்பார். பெரியாரின் பழைய உதவியாளர் முறையாக பணிக்கு வராமல் படுத்தியதால்தான் புதியவர் வீரப்பன் வந்திருக்கிறார். பெரியார்க்கு எவ்வளவு புத்தகங்கள் கொண்டு போகிறோம், கூட்டத்தில் என்ன விற்கிறது, மீதம் எத்தனை, கணக்கு வழக்கு என்ன போன்றவை குறித்து எதுவும் தெரியாது. "ஐயா... இவ்வளவுக்குப் புத்தகங்கள் வித்திருக்குங்க..." என்று உதவியாளர் கொடுக்கும் தொகையைப் பேசாமல் வாங்கிக்கொள்வார்.

இப்போது வீரப்பன் புத்தக மூட்டையைத் தூக்கிவர, தேனி நகரத்திற்கு ஒரு பொதுக்கூட்டத்திற்குச் செல்கிறார் பெரியார். மேடையிலமர்ந்து பெரியார் பேசுகிறார். மண்ணில் புத்தகங்களைக் கடைபரப்பி விற்கும் வேலை வீரப்பனுக்கு. கூட்டம் முடிந்தது. விற்றது போக மீதமிருந்த புத்தகங்களைக் கட்டாகக் கட்டி எடுத்து வருகிறார் வீரப்பன். பெரியாரிடம் வந்த வீரப்பன் ஒரு துண்டுச் சீட்டைத் தருகிறார். அதில் அங்கே விற்பனையான நூல்களின் பட்டியல், விற்ற படிகளின் எண்ணிக்கை, விலை, மொத்த விற்பனைத்தொகை ஆகிய அனைத்தும் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. மொத்த விற்பனைத் தொகையைப் பெரியாரிடம் அணா பிசகாமல் கொடுக்கின்றார் வீரப்பன். சொன்னால் நம்பமாட்டீர்கள், பெரியார் வியந்து போய்விட்டாராம். பழைய உதவியாளர் புத்தகம் விற்றுக் கொடுத்து வந்த தொகையைக் காட்டிலும் அது பன்மடங்கு மிகுதியாக இருந்ததாம். பழைய உதவியாளரிடம் எது விற்றது போனது என்று கேட்டால் விழிப்பாராம். ஆனால், வீரப்பன் ஒரு பட்டியலிட்டு விற்பனைத் தொகையைக் கொடுக்கின்றார். அந்த நேர்மையும் நம்பிக்கை தவறாத நடத்தையும்தான் வீரப்பன் என்னும் உதவியாளரைப் படிப்படியாக உயர்த்தி அமைச்சராகவும் ஆக்கின என்றால் மிகையில்லை.

வீரப்பனைப் பெரியார்க்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. வேறு உதவியாளர்களைத் தேடும் வேலையை அவர் மேற்கொள்ளவில்லை. வேறு யாரும் வீரப்பாவுக்கு நிகராக மாட்டார்கள் என்று கூறிவிட்டார். "ஐயா... வீரப்பாவைத் திருப்பி அனுப்புகிறீர்களா?" என்னும் அண்ணாதுரையின் கடிதத்துக்கு "நான் வீரப்பாவைத் திருப்பி அனுப்புவதாக இல்லை... எனக்கு இப்படியோர் ஆள் கிடைக்கமாட்டான். நீ வேறு ஆள் தேடிக்கொள்," என்று கடிதமெழுதிப் போட்டுவிட்டாராம்.


எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிர்வாகியாக நெடுங்காலம் பொறுப்பிலிருந்தவர் வீரப்பவன். நாடோடி மன்னன் படத்திற்கான கடன் பத்திரங்களில் எம்ஜிஆரின் சார்பாகக் கையெழுத்திட்டவர் வீரப்பன்தான். எம்ஜிஆர் யார் படங்களில் நடிக்கலாம், எத்தககைய கதையைத் தேர்ந்தெடுக்கலாம், யார் இயக்கலாம் என்பனவற்றையெல்லாம் முடிவு செய்யும் நிலையில் இருந்தவரும் அவர்தான். எம்ஜிஆருக்கும் வீரப்பனுக்கும் இடையிலான முதலாளி - நிர்வாகி உறவைப் பற்றி இன்னொரு கட்டுரையில் கூறுகிறேன்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES